செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

புதுடெல்லி: செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்குகளின் விசாரணைக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, ஒருவாரத்தில் அது்தொடர்பான கோப்புகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட அரசு வேலைகளை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது 3 குற்ற வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளின் அடிப்படையிலேயே அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தி்ல் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறையும் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துஅவரை கடந்தாண்டு கைது செய்தது.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த வழக்குகள் மீதான விசாரணை, சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் வேண்டுமென்றே விசாரணையை தொடங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனக்கோரி, ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில்,‘‘இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய 73 அதிகாரிகள் மீது விசாரணை நடத்த அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதுதொடர்பான கோப்பு ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே விசாரணை நடத்தப்படும்’’ என தெரிவி்க்கப்பட்டது.

அப்போது மனுதாரர் ஒய்.பாலாஜி தரப்பில், ‘‘இந்த வழக்கில்அனுமதி என்பது தேவையில்லாத ஒன்று. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு என்பதால் போலீஸார் விசாரணையைத் தொடங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்’’ என குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளாரா?’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘சிறப்பு வழக்கறிஞர் என யாரையும் நியமிக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே செந்தில் பாலாஜி உள்ளி்ட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய குறுகிய கால அவகாசத்துக்குள் அனைத்து நடைமுறைகளையும் முடித்துள்ளோம். செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இசைவு கொடுத்துவிட்டால் விசாரணை உடனடியாக தொடங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும், இந்த வழக்கில் இருதரப்புக்கும் பொதுவான சிறப்பு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும், என கோரப்பட்டது.

எப்படி கோர முடியும்? அதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசு வழக்கறிஞரை மாற்ற வேண்டும் எனக் கோரினால் அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக முறையிடலாம். 22 ஆண்டுகளாக அரசு வழக்கறிஞராகப் பணிபுரிந்து வரும் ஒருவரை மாற்ற வேண்டும் என எப்படி கோர முடியும்?’’ என்றனர்.

பின்னர், செந்தில் பாலாஜி மீதான விவகாரத்தில் ஆளுநர்அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை உச்ச நீதிமன்றத்தில் ஒருவாரத்தில் சமர்ப்பி்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் புதிதாக யாரையும் நியமிப்பதாக இருந்தால், அந்த அரசு சிறப்பு வழக்கறிஞரின் பெயரையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை செப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்