சென்னையின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக கொண்டுவந்த 1878 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக கொண்டுவந்த 1878 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்ததையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த 1878 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நேற்று கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரம் இடங்களில் 10 அடிக்கு உட்பட்ட பெரிய சிலைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிந்து, செப்.11, 14, 15ஆகிய தேதிகளில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், பாலவாக்கம் பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை, காசிமேடு ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைக்க போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர். இதன்படி, செப்.11-ம்தேதி சென்னையில் சிறிய அளவிலான சிலைகள் கரைக்கப்பட்டன.

இதையடுத்து செப்.14 மற்றும் 15-ம் தேதிகளில் சிலைகள் கரைப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பட்டினப்பாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், சாலையில் இருந்து கடல் அருகில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல டிராலி, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கரைப்புநிகழ்ச்சிக்காக மொத்தம் 16,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்தொடர்ச்சியாக நேற்றுசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூருக்கு கொண்டுவரப்பட்டு கடலில்கரைக்கப்பட்டன. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தடையை மீறிய 26 பேர் கைது: இந்து மக்கள் கட்சி சார்பில் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி தலைமையில் 26 பேர் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக தடை செய்யப்பட்ட பகுதியான ஐஸ்அவுஸ் வழியாக சென்றனர். அப்போது, ஜாம்பஜார் சிட்டிபாபு தெரு அருகில் வரும்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், இந்து மக்கள் கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, தடையைமீறி ஊர்வலமாக வந்ததாக 26 பேரைபோலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம், ஆவடி: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த 1,524 விநாயகர் சிலைகளில் 1,277 விநாயகர் சிலைகளும், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 591 சிலைகளில் 405 சிலைகளும், ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 366 விநாயகர் சிலைகளில் 196 சிலைகளும் என மொத்தம் 1,878 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்