சென்னையில் அக்.16, 17-ல் 250 மி.மீ. மழை பெய்யும்?

சென்னையில் அக்.16, 17 தேதிகளில் 250 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விட்டுவிட்டு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகின்றது.

அக்.16, 17-ல் மிக கனமழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து பிரதீப் ஜான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தமிழகத்தை பொறுத்தவரை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை கணக்கில்தான் வரும். சராசரியாக எப்போது அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை தமிழகத்தில் 440 மி.மீ. மழை பெய்யும். ஆனால், தற்போது வரை 13 நாள்களில் மட்டும் 100 மி.மீ. வரை மழை பெய்துள்ளது. கிட்டத்திட்ட 25 சதவிகிதத்தை கடந்துள்ளது.

நேற்று வரை தென்மாவட்டங்களில், உள்மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வருகின்ற நாள்களில் கடலோர மாவட்டங்களில் பெய்யும்.

தற்போது வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தாழ்வுப் பகுதியாக மாறி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரை பகுதியை நோக்கி 16, 17 தேதிகளில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வட கடலோர மாவட்டங்களில் வருகின்ற நாள்களில் மழை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16, 17-ஆம் தேதி சென்னை நோக்கி வர வாய்ப்புள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுமா என்பது தற்போது கூற முடியாது. ஆனால், அடர்ந்த மேகக் கூட்டங்கள் அதிகளவில் இருக்கக்கூடும் என்பதால் கனமழை பெய்யும்.

இன்று காலை வரை கடலோர மாவட்டங்களில் 50 முதல் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நிறைய இடங்களில் 50 மி.மீட்டரும், மயிலாப்பூரில் 70 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னையில் இருந்து வெகு தூரத்தில் கடலில் இருப்பதால், மாலைக்கு மேல்தான் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நோக்கி வரும்போது, 16 அல்லது 17-ஆம் தேதி ஏதேனும் ஒரு நாளிலேயே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 200 மி.மீ. மேல் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைந்து, வட உள்மாவட்டங்களான திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும்.

இது முதல் பெரு மழைதான். இதற்கே அச்சப்படத் தேவையில்லை, இருப்பினும், 200 மி.மீ. மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதற்கேற்றது போல் தயாராக இருக்க வேண்டும்.

சென்னையை பொறுத்தவரை 16, 17 தேதிகளில் மிக கனமழை பெய்யும். நாளை புதுச்சேரி முதல் சென்னை வரை கடற்கரை பகுதிகளில் அடர்ந்த மேகங்கள் உருவாகி மழை பெய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பகல் 1 வரை சென்னை, 20 மாவட்டங்களில் கனமழை!

வானிலை மையத்தின் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைநோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.

14.10.2024: விழுப்புரம். கடலூர், அரியலூர், பெரம்பலூர். மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

15.10.2024: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது