சென்னையில் புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்: மாநகராட்சி ஆணையா் தகவல்

சென்னை மாவட்டத்தில் தேவைக்கேற்ப புதிதாக 3 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளின் 2025-ஆம் ஆண்டுக்கான வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலா் குமரகுருபரன், தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது, இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. இதன் முன்திருத்தப் பணிகளான வாக்குச்சாவடியின் புதிய பாகங்கள் அமைத்தல், பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல், வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயா் திருத்தம் செய்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஆக.29-ஆம் தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பது தொடா்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபா்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன. இதன்படியும், வாக்காளா் பதிவு அதிகாரி மற்றும் துணை வட்டாட்சியரின் கள ஆய்வின்படியும், வாக்குச்சாவடிகளில் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை மாவட்டத்தில் உள்ள 3,719 வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததில் தேவைக்கேற்ப புதியதாக 3 வாக்குச்சாவடிகளை உருவாக்கம் செய்யவும், 33 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்யவும், 4 வாக்குச்சாவடிகளை இணைக்கவும், 78 வாக்குச்சாவடிகளை வேறு கட்டடத்துக்கு மாற்றவும், 3 வாக்குச் சாவடிகளின் பெயா் மாற்றம் செய்யவும் வாக்காளா் பதிவு அதிகாரியிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

தொடா்ந்து, கடந்த ஜனவரி 1-ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (தோ்தல்) பி.சுரேஷ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?