சென்னையில் மின் தகன மேடைகளை எல்பிஜியில் இயக்கும் மாநகராட்சி!

சென்னையில் மின் தகன மேடைகளை எல்பிஜியில் இயக்கும் மாநகராட்சி!

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 192 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 88 மயானங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது இருந்த நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டன. அப்போதைய காலத்தில் இருந்த, மின்சாரத்தால் இயக்கப்படும் தகன மேடைகள், மரக்கட்டைகளை எரிக்கும்போது உருவாகும் எரிவாயுவைக் கொண்டு இயக்கப்படும் தகன மேடைகள் என நவீனமாக உருவாக்கப்பட்டன.

பிற்காலத்தில் இந்ததகன மேடைகளால் அதிக மின்செலவு, துர்நாற்றம்மற்றும் புகை வெளியேறுவதால் ஏற்படும் காற்று மாசு போன்ற பிரச்சினைகள் நிலவி வந்தன. பெரும்பாலான மயானங்கள் கரும்புகை படிந்து, பீதியை ஏற்படுத்தும் தோற்றத்தில் இருந்தன. இந்நிலையில் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைத்து நவீன மயானங்களையும் எல்பிஜி எரிவாயுவை கொண்டு தகன மேடைகளை இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நவீன மின் தகன மேடைகளை இயக்க உயரழுத்த மின்சாரம் தேவை. சடலங்கள் வந்தாலும், வராவிட்டாலும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தகன மேடையைகுறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். 2 மணி நேரம் முன்னதாகவே தயார்படுத்த தொடங்க வேண்டும்.

இதனால் மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் மின்சார செலவு ஏற்படுகிறது. இந்த முறையில் சடலத்தை எரிக்க 2 மணி நேரம் தேவைப்படுகிறது. சாம்பலும் அதிகமாக உருவாகிறது. இவற்றை பராமரிக்க அதிக செலவாகிறது. மழை, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இவற்றை இயக்க முடியாது. ஜெனரேட்டர்களாலும் இயக்க முடியாது.

மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடைகளில் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்துவதே சவாலாக உள்ளது. இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழை காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஒரு உடலை எரிக்க 1.30 மணி நேரம் பிடிக்கிறது.

ஆனால், எல்பிஜி (சமையல் எரிவாயு) மூலமாக இயக்கும்போது, ஒரு சடலத்தை 45 நிமிடங்களில் எரித்துவிடலாம். 1 கிலோ அளவில் தான் சாம்பல் உருவாகும். தேவைப்படும்போது தகன மேடையை இயக்கினால் போதும். புகையும் வெளியேறாது.

ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை எளிதாக சமையல் எரிவாயுவுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும். பராமரிப்பும் எளிது.ஒரு உடலை எரிக்க ஒரு வணிக சிலிண்டர் (ரூ.1,817) தேவைப்படும். மாநகராட்சி சார்பில் சடலங்களை எரிக்கும்சேவை இலவசமாக வழங்கப்படுவதால், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக பெற எண்ணெய் நிறுவனங்களை அணுக முடியும். இதன்மூலம் மாநகராட்சிக்கு பெருமளவில் செலவு மிச்சமாகும்.

கடந்த 2021-22 முதல் தற்போது வரை 60 மயானங்ளை எல்பிஜி மயானங்களாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 37 மயானங்களில் பணிகள் முடிந்துள்ளன. மீதம் உள்ள 23 மயானங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்