சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்! முழு விவரம்

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பல்வேறு ரயில்கள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது.

இன்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரத்தை நோக்கி சென்றதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது.

இந்நிலையில், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள பாலத்தில் இருந்த வெள்ள நீர் வடிந்ததால், ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

ஏற்காடு, நீலகிரி, காவேரி, சேரன் உள்ளிட்ட ரயில்கள் வேறு ரயில் நிலையங்களில் இன்று காலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வழக்கம்போல் வந்துசேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவைக்கு இன்று காலை 6 மணிக்கு புறப்படவிருந்த கோவை விரைவு ரயில், காலை 10 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்கள் வேறு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கம்போல் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரு – சென்னை காவேரி ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது