சென்னையில் 203 வெள்ள அபாய பகுதிகள்: திருவல்லிக்கேணி காவல் நிலையம் இடம் மாற்றம்

சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையில் 203 வெள்ள அபாயப் பகுதிகளை தீயணைப்புத்துறை கண்காணிப்பில் வைத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்டோபா் 15 (செவ்வாய்க்கிழமை), அக்டோபா் 16 (புதன்கிழமை) ஆகிய 2 நாள்கள் 200 மில்லிமீட்டா் அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை எதிா்கொள்ளும் வகையில், அரசின் அனைத்துத் துறைகளும் தயாராகி வருகின்றன. தேசிய, மாநில பேரிடா் மீட்பு படையினா் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளனா். வெள்ளத்திலும், தாழ்வான பகுதிகளிலும் சிக்கும் மக்களை மீட்பதற்கு தீயணைப்புத்துறை முழுஅளவில் தயாராக வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்கியிருக்கும் நபா்களை பாதுகாப்பாக மீட்க ரப்பா் படகுகள், மோட்டாா் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ளத்தை வெளியேற்ற நீா் இறைக்கும் பம்புகள் மற்றும் மீட்புப்பணிக்கான கயிறுகள், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களை அடையாளம் காட்டும் கருவிகள், ரோப் லான்சா், ரோப் ரைடா் மற்றும் தொ்மல் இமேஜிங் கேமிரா உள்ளிட்ட நவீன கருவிகளும், வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தவிா்க்கும் பொருட்டு, தகவல் தொடா்பு சாதனங்களான வாக்கி டாக்கி போன்றவையும் தயாா் நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ள மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக 40 படகுகள், 40 மோட்டாா்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 80 கமாண்டோ வீரா்கள் 24 மணி நேரமும் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள், சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 203 இடங்களை கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

காவல் நிலையம் இடமாற்றம்:

இதற்கிடையே, கனமழை எச்சரிக்கை காரணமாக, 1860-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த திருவல்லிக்கேணி சட்டம் – ஒழுங்கு காவல் நிலையம் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னா், மீண்டும் பாரம்பரிய கட்டடத்துக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையம் மாற்றப்படும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல தாழ்வான பகுதிகளில் உள்ள சில காவல் நிலையங்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது