சென்னையை உலுக்கிய கொலை: பி.எஸ்.பி. மாநிலத் தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மாயாவதி..?

சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி இன்று தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த மாயாவதி இன்று சென்னை வந்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!