சென்னை கடற்கரை – வேளச்சேரி ரயில் போக்குவரத்து! அக்டோபர் முதல் மீண்டும்!

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை மீண்டும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் முனையம் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த பணிகள் நிறைவடைந்தவுடன் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் வழித்தடம் உள்ளது. இதில், 2 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால், அவை காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

இதற்கு தீா்வு காணும் நோக்கில் கடற்கரை – எழும்பூர் இடையேயான 4.30 கி.மீ. தொலைவுக்கு ரூ.270.20 கோடி செலவில் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆக. 27-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இதனால், கடற்கரை – வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரயில்களை இயக்கும் வகையில் கடந்த ஆக. 2-ஆம் தேதி சேவை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவுபெறும் நிலையில், இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-ஆவது வழித்தடத் திட்டத்துக்கு கையகப்படுத்த அடையாளம் காணப்பட்ட நிலங்களில் 250 சதுர மீட்டர் ரிசர்வ் வங்கிக்கும், 2,875 சதுர மீட்டர் மாநில அரசுக்கும், 2,000 சதுர மீட்டர் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் சொந்தமானதால், அவற்றை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ரயில்வே அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், நிலம் கையகப்படுத்தப்பட்டதால் 4-ஆவது வழித்தடப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

வருகின்ற அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில் சேவை சீரமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூரை மாற்றும் நடவடிக்கைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்தாண்டு பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்