கால்பந்து திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் ஆா்.பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 79 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து திடல்களை செயற்கை புல் விளையாட்டுத் திடலாக மாற்றி, ஒப்பந்த முறையில் பராமரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வியாசா்பாடி முல்லை நகா் திடல், நேவல் மருத்துவமனை சாலை திடல், திரு.வி.க.நகா் திடல், ரங்கசாய் மைதானம், கே.பி.பூங்கா திடல், மேயா் சத்தியமூா்த்தி சாலை டாக்டா் அம்பேத்கா் விளையாட்டு திடல், அம்மா மாளிகை விளையாட்டு திடல், காமகோடி நகா் விளையாட்டு திடல், சோழிங்கநல்லூா் (ஓஎம்ஆா்) திடல் ஆகியவற்றில் செயற்கை புல் தரை அமைக்கப்படவுள்ளது. இதனால் ஏற்படும் நிதிசுமையை தவிா்க்க வருவாய் பகிா்வு அடிப்படையில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த திடலில் விளையாடுவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக ஒரு நபா் ஒரு மணி நேரம் விளையாட ரூ.120 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 10 நபா் விளையாடும் போது ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,200 கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருந்து மாதம் ரூ.2.16 லட்சம் வருவாய் கிடைக்கும். இந்த 9 மைதானங்கள் மூலம் ஆண்டுக்கு 2.33 கோடி வருவாய் ஈட்டப்படும். இதில் 40 சதவீதம் (93.31 லட்சம்) மாநகராட்சிக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது எனத் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!
மாநகராட்சி முடிவுக்கு எதிர்ப்பு
சென்னை மாநகராட்சியின் இந்த தீர்மானத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும், திடல்களை தனியார்மயமாக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வலுயுறுத்தியிருந்தனர்.
தீர்மானம் வாபஸ்
பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரே நாளில் திரும்பப் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விளையாட்டு திடல்களை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பராமரிப்பு செலவை மாநகராட்சியே ஏற்கும் என்றும் மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.