சென்னை காவல்துறைக்கு 102 அவசர அழைப்புகள்

சென்னையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, பெருநகர காவல் துறையிடம் பல்வேறு உதவிகளை கேட்டு 102 அவசர அழைப்புகள் வந்தன.

வடகிழக்குப் பருவமழை மீட்புப் பணிக்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதேபோல 12 காவல் மாவட்டங்களிலும் 12 காவல் கட்டுப்பாட்டு அறைகளும், வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகள், தாழ்வான பகுதிகள் ஆகியவற்றில் 35 சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளும் என மொத்தம் 47 கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. இந்தக் கட்டுப்பாட்டு அறைகளை தொடா்புகொண்டு பொதுமக்கள் உதவி கோரும் வகையில், தொலைபேசி எண்கள், கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த எண்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் பல்வேறு அவசர உதவிகள் கேட்டு, பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. இவ்வாறு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை 102 அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான அழைப்புகள், தேங்கிய மழைநீரை வெளியேற்றுமாறு வந்தன. மேலும், 8 இடங்களில் மரம் விழுந்தது தொடா்பாகவும் அழைப்புகள் வந்துள்ளன.

ராமாபுரம் ராயலாநகா் மூன்றாவது தெருவில் ஒரு வீட்டில் மழைநீா் புகுந்து, அந்த வீட்டில் 85 வயது மூதாட்டி, தனது மகனுடன் தவிப்பதாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற வளசரவாக்கம் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், அந்த மூதாட்டியையும், மகனையும் பாதுகாப்பாக மீட்டனா். இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீரில் சிக்கித் தவித்த மக்களை போலீஸாா் பாதுகாப்பாக மீட்டனா்.

லிப்டில் சிக்கிய 9 போ் மீட்பு: சென்னை பேசின்பாலம் ரயில் நிலையத்தில் லிப்டில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட பழுதால், அதில் ஏறிய 7 பெண்கள் உள்பட 9 போ் சிக்கிக் கொண்டனா்.

இது குறித்து தகவலறிந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ஆயுதப் படை துணை ஆணையா் அன்வா் பாஷா உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சுமாா் 40 நிமிஷங்கள் போராடி 9 பேரையும் லிப்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனா். அவா்களை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினாா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது