சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பாலத்துக்கு ராணுவ நிலம்: விரைவாக பெற நடவடிக்கை எடுக்க அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் மேம்பாலத்துக்கு ராணுவ நிலம்: விரைவாக பெற நடவடிக்கை எடுக்க அமைச்சர் வேலு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட சாலைப்பணியில், இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறவிரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், மத்திய அரசின்தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன. இந்நிலையில் அப்பணிகளில் உள்ளஇடர்பாடுகளைக் களையும் வகையில், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று, சாலைப் பணிகளில் நில எடுப்பில் ஏற்பட்ட காலதாமதங்கள் குறித்து விவாதித்தனர்.

அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது: சாலைப் பணிகள் சிலவற்றில் நில எடுப்பு, உயர் அழுத்த மின்கோபுரங்களை மாற்றி அமைப்பது மற்றும் வனத் துறையின் அனுமதி பெறுவது போன்ற இடர்பாடுகளால் பணி முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும். மத்திய அரசின் 5 தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

ரூ.121 கோடிசெலவில், 53 கி.மீ. நீளமுள்ள 3 தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், வெள்ளக்கோயில்-சங்ககிரி சாலை உறுதிப்படுத்தும் பணி மற்றும் அவிநாசி-திருப்பூர் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணி ஆகியவற்றை மேற்கொள்ளவும் ஒப்பந்தப்புள்ளி குழு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், 384 கி.மீ நீளமுள்ள 13பணிகள் நில எடுப்பு, கட்டுமானங்கள் அகற்றுதல், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றால் காலதாமதம் ஆவதால், நில நிர்வாக ஆணையர் மற்றும் நில எடுப்பு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இதுதவிர, 31 கிமீ நீளச் சாலைப்பணிகள் வனத்துறையின் அனுமதியை எதிர்நோக்கியுள்ளன.

திருவள்ளூரில், தேசிய நெடுஞ்சாலை எல்லைக்குள் தற்காலிக கொட்டகைகள், வீடுகள், மற்ற கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும். நில எடுப்பு அலுவலர்களை உடனே நியமித்தால் சாலைகளை குறித்த காலத்துக்குள் அமைக்க முடியும். சென்னை துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு உயர்மட்ட சாலைப் பணியில், இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெற உரிய நடவடிக்கையை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ. சாலைப் பணி தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடித்து பணிகளைத் தொடங்க வேண்டும். பெங்களூர்-சென்னை நான்கு வழித்தட சாலையில் 81 கி.மீ. நீளத்துக்கு மின்சார வாரிய உயர்மின் அழுத்த கோபுரங்கள் மாற்றியமைப்பதில் உள்ள காலதாமதம் காரணமாக சாலைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க தடையின்மைச் சான்று பெறுவதில் காலதாமதம் காரணமாக தடைபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை-திருப்பதி பிரிவு 4 வழித்தட சாலை அமைக்கும் பணி, ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பொதுவான சிக்கல்களுக்கு தீர்வுகாண துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் நில எடுப்புஅலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை செயலர் இரா.செல்வராஜ், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய்த்துறை செயலர் பெ.அமுதா, நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட். பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? – ராமதாஸ்

சிறந்த கைத்தறி நெசவாளர், வடிவமைப்பாளர்களுக்கு விருது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது மேலும் ஒரு புகார்