சென்னை வரும் விமானங்களில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பு
சென்னை: சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஏராளமானோர் விமானங்களில் சென்னை திரும்பியதால், விமான பயணக் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ரயில், பேருந்து, விமானங்களில் சொந்த ஊருக்கு சென்றனர்.
இதனால் விமானங்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடுமுறை முடிந்ததும், நேற்று அனைவரும் சென்னை திரும்பினர். இதனால் சென்னை விமான நிலையத்திலும் வருகை பகுதியில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் இருமடங்காக வசூலிக்கப்பட்டது. அதேநேரம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்ததால், விமானங்களில் கட்டணமும் குறைவாக இருந்தது.
மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல நேற்று ரூ.10,119 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு இன்று விமான கட்டணம் ரூ.4,260 ஆக இருந்தது. தூத்துக்குடி – சென்னை ரூ.11,925. சென்னை – தூத்துக்குடி ரூ.6,771. திருச்சி – சென்னை ரூ.11,109. சென்னை- திருச்சி ரூ.5,796. கோவை – சென்னை ரூ.10,179. சென்னை – கோவை ரூ.4,466. சேலம் – சென்னை ரூ.9,516. சென்னை – சேலம் ரூ.4,647 என கட்டணம் இருந்தது.