சென்னை விரைந்த பேரிடர் மீட்புக் குழுக்கள்! அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று சென்னை, நெல்லூர் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அக்டோபர் 17 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக். 16 அல்லது 17 ஆகிய ஏதேனும் ஒரே நாளில் 200 மி.மீ. மேல் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை ஆலோசனை நடத்தினார்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் மீட்புக் குழுக்கள்

சென்னையில் ஏற்கெனவே தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் உள்ள நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மேலும் 6 குழுக்கள் நெல்லையில் இருந்து சென்னை விரைந்துள்ளன.

கோவை, திருச்சி மற்றும் நீலகிரியில் தலா 3 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம், மொத்தம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், அரக்கோணத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் வீரர்கள் மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : சென்னையில் அக்.16, 17-ல் 250 மி.மீ. மழை பெய்யும்?

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து நிலைமையை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தாகரிப்பேட்டை மற்றும் கோபாலபுரத்தில் மணிக்கு 1,500 பேருக்கு உணவு தயாரிக்கும் வகையில் உணவுக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்ற 900 மோட்டார் பம்பு செட்டுகளும், மரக் கிளைகளை அகற்ற 280 மரம் அறுக்கும் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 180 வெள்ள அபாய பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள 25 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாமல் இருக்கும் 43 இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கனரக மோட்டர்கள் பொருத்தப்பட்ட 57 டிராக்டர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ரிப்பன் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது