செபி தலைவரை பதவியில் இருந்து நீக்க கோரி சென்னையில் காங். ஆர்ப்பாட்டம்: மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

செபி தலைவரை பதவியில் இருந்து நீக்க கோரி சென்னையில் காங். ஆர்ப்பாட்டம்: மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை: பங்குச் சந்தை மோசடி தொடர்பாகசெபி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மற்றும் அதானி மீது நடவடிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் தமிழக காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீர் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள செபியின் தலைவரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கி, பங்குச் சந்தை முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் கண்டனஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக் கொண்டது.

அதன்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழககாங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:

அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், பிறகும் பங்குச் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

இதனால் ரூ.35 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன, பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு மறுத்து வருகிறது.

அதுபோல சமூகநீதி மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லாததால் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பாஜக அரசுக்கு ஆபத்து நெருங்குகிறது. எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், மத்திய அரசைக் கண்டித்தும், செபி தலைவரை பதவி நீக்கக் கோரியும், மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும் காங்கிரஸார் கோஷமிட்டனர். கண்டனஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் காங்கிரஸார் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் திடீர் மறியல் போராட்டத்தால் நுங்கம்பாக்கம், எழும்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு