சைபர் குற்றங்களை தடுக்க சிஐஓஆர் சேவை அறிமுகம்: தமிழக காவல்துறை நடவடிக்கை

சைபர் குற்றங்களை தடுக்க சிஐஓஆர் சேவை அறிமுகம்: தமிழக காவல்துறை நடவடிக்கை

சென்னை: சைபர் குற்றங்களைத் தடுக்க சிஐஓஆர் சேவையை தமிழக காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் இணையவழியில் அதிகப்படியான சைபர் குற்றங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சைபர்குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழக காவல் துறை சார்பில்சிஐஓஆர் (மையப்படுத்தப்பட்ட சர்வதேச அவுட் ரோமர்) என்றசேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அசோக்நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், இணைய குற்றப்பிரிவு கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல்தலைமையில், தொலைதொடர்புத் துறை மற்றும் ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவை துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது சந்தீப் மிட்டல் பேசும்போது, ‘‘இந்திய தொலைத் தொடர்பு சந்தாதாரர்களை மோசடியான சர்வதேச போலி அழைப்புகளில் இருந்து சிஐஓஆர் பாதுகாக்கிறது. குறிப்பாக, இந்திய எண்களில் இருந்து வரும் போலியான அழைப்புகளை இது கண்டறிகிறது. போலியான அழைப்புகள் சந்தாதாரர்களை அடைவதற்கு முன்புஅதை தடுப்பதே இந்த சேவையின் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சைபர் குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படும் 4,430 போலி தொலைபேசி எண்கள் கண்டறியப்பட்டுள்ளன’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில், மோசடி செய்யப்பட்ட அழைப்புகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும் உள்ள வசதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், போலி அழைப்புகளை தடுப்பதற்கான புதிய அம்சத்தின் பல்வேறு சாத்தியங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்தும், வாட்ஸ்அப், ஸ்கைப் போன்றவற்றின் மூலம் வரும் அழைப்புகளுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்துவதற் கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு