சொகுசு வீடுகளாக மாறும் நட்சத்திர ஹோட்டல்! கட்டடத்தை இடிப்பதில் இத்தனை சவாலா?

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த கிளாரியன் ஹோட்டல் பிரசிடென்ட் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள கிளாரியன் ஹோட்டல் பிரசிடென்ட், 1978ஆம் ஆண்டு முதல் நகரின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்தது, இப்போது புதிய அடையாளத்தைப் பெறவிருக்கிறது.

ஆர்கே சாலையில் அமைந்திருக்கும் இந்த நட்சத்திர ஹோட்டல், இடிக்கப்பட்டு, அங்கு புதிதாக சொகுசு வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.

வானுயர்ந்த அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. நகரின் மிக முக்கிய பகுதியில் இருக்கும் இந்த உயர்ந்த கட்டடத்தை இடிக்கும் பணியும் ஒரு சவாலாகவே உள்ளது.

இதன்காக தென்கொரியாவிலிருந்து வால்வோ ஆலையிலிருந்து 75 டன் இடிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை பிகே யூனிக் பிராஜெக்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த கட்டடத்தை பாதுகாப்பான முறையில் இடிக்கும் பணிக்கு வால்வோ கட்டமைப்பு கருவிகள் மூலம், அதிநவீன கட்டமைப்பு தொழில்நுட்பம் உதவுகிறது.

மிக பரபரப்பாக இயங்கும் நகரப் பகுதிகளில் வானுயர்ந்த கட்டடங்களை இடிக்கும் பணிகள் எப்போதுமே கட்டமைப்புத் துறையினருக்கு மிகப்பெரிய சவால்தான், அதனை பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்றுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை அவர்கள் எப்போதும் தேடிக்கொண்டேதான் இருப்பார்கள்.

சொல்லப் போனால்… ஆளைக் கொல்கிறார்கள், கட்டடத்தை இடிக்கிறார்கள்… சட்டம் யார் கையில்?

அந்த வகையில் தற்போது வால்வோ இசி75டியுஎச்ஆர் எனப்படும் இடிக்கும் இயந்திரம், பாதுகாப்பான முறையில் கட்டடங்களை இடிப்பதில் முக்கிய இடம் வகிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி, தென்னிந்தியாவில், உயர்ந்த கட்டடத்தை இடிக்கும் பணி முதல் முறையாக சென்னையில் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மௌலிவாக்கத்தில், மிக உயர்ந்த கட்டடத்தை இடிக்க வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதனால் ஏற்பட்ட காற்றுமாசுபாடு, இந்த இயந்திரத்தின் உதவியால் இடிக்கும்போது வெகுவாகக் குறையும் என்றும் அதுபோல, கட்டடத்தை இடிக்கும்போது ஏற்படும் ஒலி மாசும் குறைவதாகவும் கூறுகிறார்கள்.

இந்தியாவில், இதுபோன்ற இரண்டு இயந்திரங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.5.5 கோடி. இந்த இயந்திரத்துக்கு சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால், கட்டடத்தின் தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப இடிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் பாதுகாப்பாக இடிக்கும் பணி நடைபெறும் என்று இடிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுகிறார்கள்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!