சொத்து தகராறில் பயங்கரம்: தந்தையை வேன் ஏற்றி கொன்ற மகன்

சொத்து தகராறில் மகன், தந்தையை வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63 வயது). இவரது மகன் வெங்கடேசன் (28 வயது). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். ராஜேந்திரனுக்கு மேலும் 3 மகள்கள் உள்ளனர்.

ராஜேந்திரனுக்கு சொந்தமாக அவரது வீட்டின் அருகிலேயே 4 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி தரும்படி அவரது மகன் வெங்கடேசன் கேட்டு வந்தார். அதற்கு மறுத்த ராஜேந்திரன், தனது மகள்களுக்கும் அந்த நிலத்தில் பங்கு கொடுக்க திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதற்கு வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள அந்த நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வேனில் வந்த வெங்கடேசன், மீண்டும் அந்த நிலம் தொடர்பாக தந்தையுடன் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், தான் ஓட்டும் வேனை, தந்தை என்றும் பாராமல் ராஜேந்திரன் மீது ஏற்றினார்.

வேன் மோதியதில் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த மணலில் சரிந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே வெங்கடேசன், வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி