சொந்த மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், இந்திய அணி அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிரான தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன்: ரோஹித் சர்மா
விமர்சனங்களின் பிடியில் இந்திய அணி
சொந்த மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்த இந்திய அணியை, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர்
வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சொந்த மண்ணில் 3-0 என தொடரை முழுமையாக இழப்பதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது.
அணி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை இந்த டெஸ்ட் தொடர் தோல்வி உணர்த்துகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தயாராக இல்லையா? தவறான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடியதன் விளைவா? அல்லது போட்டிக்கு போதிய அளவில் பயிற்சி செய்யவில்லையா?
முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். முதல் மற்றும் இரண்டாவது என இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரிஷப் பந்த் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் மிகவும் அருமையாக விளையாடினார்.
வீரேந்திர சேவாக்
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரராக வீரேந்திர சேவாக், இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய அணி வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குறுகிய வடிவிலான போட்டிகளில் சோதனை முயற்சியில் சிலவற்றை முயற்சித்து பார்க்கலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுபோன்று தேவையற்ற சோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை. சிறப்பாக செயல்பட்டு தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா!
ஹர்பஜன் சிங்
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும், யாரையும் ஆட்டமிழக்கச் செய்யலாம். இதுபோன்ற ஆடுகளங்களில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே அல்லது சாக்லைன் முஸ்தக் போன்ற லெஜண்டரி வீரர்கள் தேவையில்லை. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்திய அணிக்கே எதிரியாக மாறிவிட்டது. இதுபோன்ற ஆடுகளங்களில் இந்திய அணி நன்றாக விளையாட பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான ஆடுகளங்கள் அனைத்து பேட்ஸ்மேன்களையும் மிகவும் சாதாரண வீரராக மாற்றிவிடும்.
இர்ஃபான் பதான்
இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் முடிவெடுப்பவர்கள் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்று அசத்தியுள்ளனர்.
யூசுஃப் பதானுடன் இந்திய அணியின் ஆட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டேன். உள்ளூர் போட்டிகள் குறித்து அவர் மிகவும் மதிப்புமிக்க ஒரு கருத்தை தெரிவித்தார். நாம் புற்கள் நிறைந்த ஆடுகளங்களில் அல்லது தட்டையான ஆடுகளங்களில் விளையாடுகிறோம். ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அதிகம் விளையாடுவதில்லை என்றார். அதேபோல இந்திய அணியின் முக்கிய வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. உள்ளூர் போட்டிகளில் அவர்கள் விளையாடாதது இந்திய அணியை பாதிக்கும்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி; மனம் திறந்த நியூசி. கேப்டன்!
மைக்கேல் வாகன்
மற்ற அணிகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுவது போல இந்திய அணியும் தடுமாறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது நம்பமுடியாத விஷயமாக இருக்கும். ஆனால், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முழுமையாக வென்றுள்ளது மிகவும் சிறப்பானது. நியூசிலாந்தின் இந்த டெஸ்ட் தொடர் வெற்றி மிகப் பெரிய டெஸ்ட் தொடர் வெற்றியாக இருக்கப் போகிறது. மற்ற அணிகளைப் போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறி வருகின்றனர் என்றார்.
இயான் பிஷப்
நியூசிலாந்து அணி மிக அற்புதமாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 6 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை. அணியில் கேன் வில்லியம்சன் இல்லை. நியூசிலாந்து அணி நம்பமுடியாத வேலையை செய்து முடித்திருக்கிறது. ஆடவர் அணியும், மகளிர் அணியும் கடந்த சில வாரங்களாக நியூசிலாந்துக்கு பெருமை சேர்த்து வருகிறது.
லாசித் மலிங்கா
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வரலாற்று வெற்றி நியூசிலாந்துக்கு இரட்டிப்பு சிறப்பானது. வாழ்க்கையில் ஒரு முறை கிடைக்கும் வெற்றியைப் போன்ற வெற்றியை நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ளது. இலங்கையில் தொடரை முழுமையாக இழந்ததிலிருந்து, இந்தியாவுக்கு எதிராக தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது நியூசிலாந்து. நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது.
இதையும் படிக்க: இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து சாதனை
மிட்செல் மெக்லனகன்
நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் மெக்லனகன், வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நியூசிலாந்து அணியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இதுவரை நியூசிலாந்து அணி பெற்ற வெற்றிகளிலேயே மிகச் சிறந்த வெற்றி என்று இதனைக் கூறலாம். இந்திய மண்ணில் தொடரை முழுமையாக வென்றது நம்பமுடியாத விதமாக இருக்கிறது என்றார்.