சோழவரத்தில் 24 மணிநேரத்தில் 302 மி.மீ. மழை பதிவு!

சோழவரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 302 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரத்தை நோக்கி சென்றதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 302 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக, செங்குன்றத்தில் 279 மி.மீ., ஆவடியில் 255 மி.மீ. மழை பெய்துள்ளது.

மேலும், சென்னையில் கடந்த 48 மணிநேரத்தில் அதிகபட்சமாக கொளத்தூர், திரு.வி.க. நகரில் 310 மி.மீ. மழையும், மணலி, அம்பத்தூரில் 300 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க : தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்ததால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கிச் செல்வதால், நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது.

இதனால், பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரும் வடிந்ததால், சாலைப் போக்குவரத்து சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சீரானது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது