“ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” – முன்னாள் அமைச்சர் பெருமிதம்

“ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” – முன்னாள் அமைச்சர் பெருமிதம்

செங்கல்பட்டு: “ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அஞ்சூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்: அப்போது முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசியது: “திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு சிலருக்கு தந்தவர்கள் பெரும்பான்மையான பெண்களை வஞ்சித்துள்ளனர்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றனர். ஆனால், தற்போது அது முடியாது என்று அவர்களுக்கே தெரிந்துவிட்டது. அதனால், மக்களிடம் கையெழுத்துப் பெறுகிறேன் என்ற பெயரில் நாடகத்தை அரங்கேற்றினர். ஆனால், முன்னாள் முதல்வர் பழனிசாமி அரசுப் பள்ளி மாணவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை அளித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தற்போது பழனிசாமி என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்களும் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர். குடும்பக் கட்சியாக திமுக உள்ள நிலையில் ஜனநாயக முறையில் செயல்படும் கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. தொண்டனும் தலைவனாக கூடிய இயக்கம் நமது கழகம் ஆகும்.

எதையுமே செய்யாத திமுக அரசு விளம்பரம் செய்து பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை மக்களிடத்தில் கழகத்தினர் கொண்டு சேர்க்க வேண்டும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

Related posts

காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை – பிரதமர் மோடி கடும் தாக்கு

அரியானா தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் கடுமையாக சிந்திக்க வேண்டும் – உமர் அப்துல்லா

புதுச்சேரியில் பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்