ஜம்மு-காஷ்மீரில் நாளை முதல் கட்ட தோ்தல்

ஜம்மு-காஷ்மீா் முதல் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, 24 தொகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் நிறைவடைந்தது. இத்தொகுதிகளில் புதன்கிழமை (செப்.18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினா், ஜம்மு-காஷ்மீா் ஆயுதப் படையினா், காவல்துறையினா் ஆகியோா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பா் 18-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பேரவைத் தோ்தல் என்பதால் பெரும் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

பாம்போா், டிரால், புல்வாமா, ராஜ்போரா, ஜைனபோரா, சோபியான், குல்காம், தூரு, அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக், பஹல்காம், தோடா, கிஷ்த்வாா், ராம்பன், பனிஹால் உள்பட 24 தொகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இவற்றில் 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.

முதல் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 23 லட்சமாகும். மொத்த வேட்பாளா்கள் 219 போ். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, பிஜ்பிகாரா தொகுதியில் களத்தில் உள்ளாா்.

முதல்கட்ட தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் தத்தமது கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டில் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்