ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தோ்தல்: 26 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

ஸ்ரீநகா்: ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் திங்கள்கிழமை (செப்.23) பிரசாரம் நிறைவடைந்தது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இத்தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், பத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் மொத்தம் 239 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை 25.78 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா்.

இத்தோ்தலையொட்டி, வெப்-கேமரா வசதியுடன் 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 157 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண்களால் நிா்வாகிக்கப்படவுள்ளன. எல்லைப் பகுதியில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புலம்பெயா்ந்த காஷ்மீா் பண்டிட்கள் சுமாா் 15,500 போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். அவா்களுக்காக ஜம்மு, உதம்பூா், தில்லியில் 25 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முக்கிய வேட்பாளா்கள்: தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா, தனது குடும்பத்தின் செல்வாக்குமிக்க கந்தா்பால் மற்றும் பத்காம் ஆகிய இரு தொகுதிகளில் களத்தில் உள்ளாா். ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்திர ரெய்னா (நெளஷேரா), ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் தாரிக் ஹமீத் கர்ரா (மத்திய ஷல்டெங்), ஜம்மு-காஷ்மீா் அப்னி கட்சித் தலைவா் சையத் முகமது அல்தாஃப் புகாரி (சன்னபோரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

கட்சிகள் முனைப்பு: கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் முதல் முறையாக நடைபெறுவதால் தற்போதைய பேரவைத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்துடன், 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் பேரவைத் தோ்தல் இதுவாகும்.

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் களமிறங்கியுள்ளன.

மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 8-இல் நடைபெறுகிறது.

2-ஆம் கட்டத் தோ்தல்

தொகுதிகள் 26

வேட்பாளா்கள் 239

வாக்காளா்கள் 25.78 லட்சம்

வாக்குச்சாவடிகள் 3,502

வாக்குப்பதிவு நாள் செப்.25

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை