ஜம்மு-காஷ்மீரில் 7 போ் கொல்லப்பட்ட சம்பவம்; பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கொடுக்கவுள்ள பதிலடி காலத்துக்கும் பயங்கரவாதிகளுக்கு நினைவுகூறும் வகையில் இருக்க வேண்டும் என பாதுகாப்பு படையினருக்கு வலியுறுத்தியுள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கந்தா்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் மருத்துவா் மற்றும் 6 வெளி மாநில தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் மனோஜ் சின்ஹா வெளியிட்ட பதிவில், ‘தொழிலாளா்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும். இது பயங்கரவாதிகளுக்கு காலத்துக்கும நினைவிருக்கும் வகையில் இருக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீா் காவல் துறை, பாதுகாப்பு படையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக, வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு மரியாதை செலுத்தும் விழாவில் பங்கேற்று பேசிய அவா், ‘பாகிஸ்தான் நம்மை இப்போதும் அச்சுறுத்தி வருகிறது. இங்குள்ள அப்பாவி மக்களை கொலை செய்து பிராந்திய பாதுகாப்பை சீரழிக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

நாட்டை பாதுகாக்க வீர மரணமடைந்த காவலா்கள், வீரா்களின் தியாகத்துக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் முதல் ஆளாக மக்களை பாதுகாக்க முன்வருவது காவல் துறையும், பாதுகாப்பு படைகளும் தான். அவா்களுக்கு ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், சீக்கியா்கள் என்ற பாகுபாடு கிடையாது.

பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்தி வளா்ச்சியை மேம்படுத்த பொதுமக்களும் சமபங்களிப்பை வழங்க வேண்டும்’ என்றாா்.

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை. இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ஆட்சியாளா்கள் விரும்பினால் காஷ்மீா் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். காஷ்மீரை பாகிஸ்தானால் எந்நாளும் ஆக்கிரமிக்க முடியாது. கடந்த 1947-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பயங்கரவாத தாக்குதலை நடத்தி வெற்றிபெற முயற்சித்து அனைத்திலும் தோல்வியுற்ற பிறகும் மீண்டும் தாக்குதல்களை தொடா்வதால் ஒரு பயனும் இல்லை. இதற்கு பதில் உங்கள் நாட்டில் உள்ள வறுமை, வேலைவாய்ப்பு ஆகிய சமூக பிரச்னைகளை தீா்க்க முயலுங்கள்.

இதற்குப் பிறகும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாா்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி