ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது: பாஜக தேர்தல் அறிக்கை!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, கட்சியின் தேர்தல் பிரசாரத்தை உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 6) தொடக்கி வைத்தார்.

ஜம்மு – காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றும், சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது வரலாறு எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

ஜம்மு – காஷ்மீர் தேர்தல் களம்

ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பர் 18 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குகிறது. செப்டம்பர் 25 இரண்டாம் கட்டமும், அக்டோபர் 8 – மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்குச் சென்றுள்ளார் அமைச்சர் அமித் ஷா.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு சில நாள்களே உள்ளதால், ஜம்மு – காஷ்மீரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரத்தை அமைச்சர் அமித் ஷா இன்று (செப். 6) தொடக்கி வைத்தார்.

அறிக்கையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு மீண்டும் கொண்டுவரப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சியுடன் போட்டியிடும் காங்கிரஸ், சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கு எதிராக சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமித் ஷா பேசியதாவது,

''பாஜகவுக்கு ஜம்மு – காஷ்மீர் மிகவும் முக்கியமானது. இந்த மண்ணை இந்திய எல்லைக்குட்பட்டதாக வைத்துக்கொள்ள எப்போதும் முயற்சிக்கிறோம். இந்தியாவின் ஒரு பகுதிதான் ஜம்மு – காஷ்மீர் என நாங்கள் (பாஜக) நம்புகிறோம். அது எப்போதும் இந்தியாவுடையதாகவே இருக்கும். இந்த மண்ணுக்கு உரிமையில்லாத நடிகர் (ராகுலைக் குறிப்பிட்டு) பதற்றமான நிலையிலேயே இதனை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஜம்மு – காஷ்மீரின் வரலாற்றை எழுதினால், 2014க்கு பிறகான 10 ஆண்டுகளை பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 370 என்பது ஒரு வரலாறு. இது மீண்டும் திரும்ப கொண்டுவரப்படாது. சிறப்பு அந்தஸ்து வழங்குவதை மீண்டும் அனுமதிக்கமாட்டோம். ஜம்மு – காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்களையும் ஆயுதங்களையும் கொடுத்தது சட்டப்பிரிவு 370 தான்'' என அமித் ஷா பேசினார்.

சட்டப்பிரிவு 370

அக்டோபர் 1949 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பிரிவு 370. இது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது. காஷ்மீருக்கு உள்நிர்வாக விஷயங்களில் அதன் சுயாட்சியை வழங்கியது. வெளியுறவு, நிதி, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்திலும் தனி விதிமுறைகளை வகுத்துக்கொள்ள அனுமதித்தது.

ஆனால் 2019ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ பாஜக அரசு திரும்பப் பெற்றது. சட்டப்பிரிவு 35ஏ-வை முற்றிலுமாக நீக்கியது. ஜம்மு – காஷ்மீரை இரண்டாகப் பிரித்தது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி