ஜம்மு-காஷ்மீரில் 2014-ஆம் ஆண்டுக்குப் பின், பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நகர்வாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை (செப். 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (செப்.16) நிறைவடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், நடைபெறும் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாள்களுக்குள் சிறுபான்மையினருக்கான ஆணையம் உருவாக்கப்படும் என்றும், ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ. 72 நிர்ணயிக்கப்படும், அனைத்து வகையான பயிர்களுக்கும் 100 சதவிகித காப்பீடு வழங்கப்படும் என்று ஸ்ரீநகரில் இன்று(செப்.16) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.