ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: மேலும் 6 வேட்பாளா்களை அறிவித்தது காங்கிரஸ்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான மேலும் 6 வேட்பாளா்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது.

இதன்படி ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவா் தாரீக் ஹமீது கர்ரா மத்திய சால்டெங் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தல் செப்டம்பா் 18, 25, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பிராந்திய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் தோ்தலைச் சந்திக்கிறது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய பாந்தா்ஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு எட்டப்படாத 5 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே களமிறங்க முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் மத்திய தோ்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பொறுப்பு கே.சி. வேணுகோபால், ஜம்மு-காஷ்மீா் வேட்பாளா்கள் தோ்வு குழு தலைவா் சுக்ஜீந்தா் சிங், மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆலோசனைக்குப் பிறகு 6 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதையும் சோ்த்து மொத்தம் 15 வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த வாரம் 9 வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்தது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!