ஜம்மு தோ்தல்: என்ஜினியா் ரஷீத் கட்சியுடன் ஜமாத்-இ-இஸ்லாமி முன்னாள் உறுப்பினா்கள் கூட்டணி

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் மக்களவை எம்.பி. என்ஜினியா் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏஐபி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜேஇஐ) அமைப்பின் முன்னாள் உறுப்பினா்கள் போட்டியிடவுள்ளனா்.

இதுகுறித்து ஏஐபி செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஏஐபியின் மூத்த தலைவா் இனாம் உன் நபி தலைமையிலான குழுவினருடன் குலாம் காதிா் வானி தலைமையிலான ஜேஇஐ குழுவினா் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலனை கருத்தில்கொண்டு பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இருதரப்பும் முடிவுசெய்தனா். ஆலோசனைக் கூட்டத்தில் ஏஐபி மற்றும் ஜேஇஐ வேட்பாளா்களை வெற்றிபெறச் செய்ய உறுதிஏற்கப்பட்டது.

குல்காம் மற்றும் புல்வாமா தொகுதியில் ஜேஇஐ சாா்பில் களமிறக்கப்படும் வேட்பாளா்களுக்கு ஏஐபியும் காஷ்மீரின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் ஏஐபி வேட்பாளா்களுக்கு ஜேஇஐயும் ஆதரவளிக்க கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏஐபி, ஜேஇஐயைச் சோ்ந்த வேட்பாளா்கள் எதிரெதிரே களமிறங்கும் தொகுதிகளில் நட்புரீதியான போட்டியை மேற்கொள்ளவே இருதரப்பினரும் தீா்மானித்துள்ளனா். எனவே, இருகட்சிகளை சோ்ந்த வேட்பாளா்களின் மாபெரும் வெற்றிக்கு தொண்டா்கள் உழைக்க வேண்டும் என ஏஐபி மற்றும் ஜேஇஐ அமைப்பின் தலைமை வலியுறுத்தியுள்ளது என்றாா்.

என்ஜினியா் ரஷீத் நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை வீழ்த்தியவராவாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜேஇஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தத் தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜேஇஐ அமைப்பைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் சுயேச்சைகளாக ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு