ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் முறையீடு

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் முறையீடு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

தில்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசரமாகப் பட்டியலிடுமாறு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை கோரப் போவதாக முதல்வரின் வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் கேஜரிவாலை கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜூன் 20-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், "வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு நிறுத்தி வைக்கப்படும். இரு தரப்பினரும் தங்களது பதிலை திங்கள்கிழமைக்குள் (ஜூன் 24) தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து பதில்களையும் ஆராய்ந்து 2-3 நாள்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்' என்று கூறியது; இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை முதல்வர் கேஜரிவால் தற்போது நாடியுள்ளார்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்