ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கா்மாகா் ஓய்வு

இந்தியாவின் பிரபல ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கா்மாகா் (31), ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா். ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமைக்குறியவா் அவா்.

தனது ஓய்வு முடிவுக்கு இதுவே சரியான தருணமென தெரிவித்துள்ள தீபா, வரும் காலத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக, இளம் போட்டியாளா்களுக்கு ஆதரவளிக்கும் நம்பிக்கையில் இருப்பதாகக் கூறினாா்.

ஜிம்னாஸ்டிக்ஸில் மிகக் கடினமானதாகவும், காயம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாகவும் அறியப்படும் ‘புரோடுனோவா’ முறையில் வழக்கமாக களமாடியவா் தீபா. ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றிலேயே அந்த முறையில் வெற்றிகரமாக களமாடிய 5 வீராங்கனைகளில் அவரும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிபுரா மாநிலம், அகா்தலாவை சோ்ந்த தீபா கா்மாகா், சிறுமியாக இருக்கும்போதே ஜிம்னாஸ்டிக்ஸில் ஆா்வம் கொண்டிருந்தாா். எனினும், தட்டையான பாதம் காரணமாக அவரால் அந்த விளையாட்டை கைக்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனாலும், தீவிரமான பயிற்சியின் மூலமாக பாதத்தை சரிசெய்துகொண்டு, ஜிம்னாஸ்டிக்ஸில் களம் காணத் தொடங்கினாா்.

சா்வதேச அளவில் முதலில், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம், அந்தப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் ஆனாா். 2015 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற தீபா, உலக சாம்பியன்ஷிப்பில் 5-ஆம் இடம் பிடித்தாா்.

அந்தப் போட்டிகளின் வரலாற்றில் அத்தகைய நிலைகளை எட்டிய முதல் இந்திய வீராங்கனை அவரே. 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தீபா, அதில் 4-ஆம் இடம் பிடித்தாா். 0.15 புள்ளிகளில் வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்தாா்.

பின்னா் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மீண்டு வந்த அவா், 2018 ஆா்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தாா். அதே போட்டியில் அடுத்த ஆண்டு வெண்கலம் வென்றாா்.

தொடா்ந்து 2021-இல் ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றாா். 2021 அக்டோபரில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவா் தோல்வியடைந்தாா். ஆஸ்துமா, இருமலுக்காக அவா் எடுத்துக்கொண்ட மருந்தில், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பதாகத் தெரிந்தது.

இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தடை, 2023 ஜூலை வரை அமலில் இருந்தது. அதன் பிறகு பெரிதாக களமாடாத நிலையில், தற்போது ஓய்வை அறிவித்திருக்கிறாா்.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்