டாஸ் வெல்லப்போவது யார்? டிரம்ப்-கமலா ஹாரிஸ் நேரடி விவாதம் பற்றி அறிய வேண்டியவை!

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியா நகரில் தேசிய அரசியலமைப்பு மையத்தில் இந்த தேர்தல் விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதம் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது.

டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் என்பதால், இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதி முக்கியத்துவம் ஏன்?

அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர்கள் இருவரும், இன்று நடைபெறும் விவாதத்தில் பேசும் உரையை வைத்துத்தான், 'யாருக்கு வாக்களிப்பது என்று இன்னமும் முடிவு செய்யாத வாக்காளர்களை' அணுகுவதற்கான கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பு இந்த விவாதம் என்பதால்தான் இது அதிமுக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சொகுசு வீடுகளாக மாறும் நட்சத்திர ஹோட்டல்! கட்டடத்தை இடிப்பதில் இத்தனை சவாலா?

அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பரபரப்பும் ஒட்டிக்கொண்டது. அனல்பறக்கும் பரப்புரைகளுடன் போட்டியாளர்களின் நேரடி விவாதம் அந்நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

போட்டியாளர்களுக்கான சவால் என்ன?

அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப். எனவே, ஹாரிஸ் இந்த விவாதத்தில் தன்னைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும். அதிபர் வேட்பாளராக தெரியப்படுத்த அவருக்கு மிகக் குறைந்த காலமே கிடைத்திருக்கிறது என்பதால் இது மிகவும் சவால்தான். டிரம்ப், முந்தைய விவாதத்தில் தன்னை விட வயதானவரான ஜோ பைடனை எதிர்கொண்டார். ஆனால், தற்போது அவரை விட இளமையான துடிப்பான கமலா ஹாரிஸை சந்திக்க வேண்டும். தேர்தல் களம் இருவருக்குமே கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.

லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் இன்று நடக்கும் விவாதத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த விவாதத்தை அடிப்படையாக வைத்தே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவும் செய்வார்கள்.

விவாதம் எப்படி நடக்கும்? விதிமுறைகள் உண்டா?

இரண்டு இடைவேளைகளுடன், ஒன்றேகால் மணி நேரம் நடைபெறும் இந்த விவாதத்தில், போட்டியாளர்கள் தன்னிச்சையாக எந்த கருத்தையும் கூற அனுமதிக்கப்பட மாட்டார்கள். நெறிமுறையாளர்களாக டேவிட் முர், லின்சே டாவிஸ் இருப்பார்கள். இவர்கள் மட்டுமே கேள்வி எழுப்புவார்கள்.

போட்டியாளர்களை, நெறிமுறையாளர்கள்தான் அறிமுகப்படுத்துவார்கள். தற்போது பதவியில் இருக்கும் கட்சி வேட்பாளர்தான் முதலில் அறிமுகப்படுத்தப்படுவார். துவக்க உரைக்கு அனுமதி கிடையாது, நிறைவு உரையாற்ற 2 நிமிடங்கள் வழங்கப்படும்.

விவாதம் தொடர்பாக முன்கூட்டியே எந்த தகவலும் பகிர்ந்துகொள்ளப்படாது, போட்டியாளர்களுக்கு ஒரு பேனா, எழுதுவதற்கு காகிதம், ஒரு பாட்டில் குடிநீர் மட்டும் வழங்கப்படும்.

ஒருவர் பேசும்போது மற்றொருவர் குறுக்கிட்டால் நெறிமுறையாளரால் எச்சரிக்கப்படுவார், ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களும் தொடர்ந்து குறுக்கீடு செய்தால், மைக்ரோஃபோன்கள் அணைக்கப்படும்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும், கேள்விகளுக்கு விடையளிக்க தலா 2 நிமிடங்கள் ஒதுக்கப்படும். ஒருவேளை, எதிர் போட்டியாளரின் கருத்துகளை மறுத்து விவாதிக்க விரும்பினால், அந்த போட்டியாளருக்குக் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்படும்.

ஒருவரை ஒருவர் நேரடியாகக் கேள்வி கேட்க அனுமதியில்லை, விவாதம் நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

மைக் அணைக்கப்படுமா?

ஒவ்வொரு வேட்பாளரும் பேசும்போது, மற்ற வேட்பாளரின் மைக்ரோஃபோன் அணைக்கப்படும். முதலில், இந்த விவாதத்தில் பங்கேற்பது குறித்து பேசிய கமலா ஹாரிஸ், மைக்ரோஃபோனை அணைக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார். பிறகு விதிமுறைகளை விளக்கிய போது அதனை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தேர்தல் விவாதத்தில் பங்கேற்கும் தலைவர்கள், ஒருபோதும் தயாரிக்கப்பட்ட முன் குறிப்புகளுடன் வருவதற்கும், அதனைப் பேசுவதற்கும் அனுமதி வழங்கப்படாது. இந்த விவாதத்தின் வெற்றியே, நிறைவுக் கருத்தை யார் கூறுவார்கள் என்பதைப் பொறுத்து அமையும். எனவே, நிறைவு கருத்தை கூறுவது யார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, விவாதம் முடிந்ததும், நிறைவுக் கருத்தை யார் சொல்வது என்பதை தேர்வு செய்ய டாஸ் போடப்படுமாம்.

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், டிரம்ப்புக்கும் இடையே கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தின்போது, பைடன் மிகவும் தடுமாறியதால் அவர் போட்டியிலிருந்து விலக நேரிட்டது குறிப்பிடதத்க்கது. இந்த நிலையில்தான், டிரம்ப் – கமலா ஹாரிஸ் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவே இரு வேட்பாளர்களுக்கும் இடையிலான இறுதி விவாதமாக இருக்கலாம் என்றும், தேர்தலுக்கு முன்பு, மற்றொரு விவாதம் நடைபெறுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

முதல்வர் மருந்தகம் அமைக்க வாய்ப்பு: எவ்வாறு விண்ணப்பிப்பது? வெளியான அறிவிப்பு!

ஜெய்சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய ஆஸி., ஊடகத்திற்கு கனடா தடை: இந்தியா கண்டனம்

India raids offices of sellers using Amazon, Flipkart platforms, sources say