டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார்! ஜோ பைடன்

துப்பாக்கிச் சூட்டில் டொனால்டு டிரம்ப் காயமடையவில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் டிரம்ப்பை கொல்ல முயற்சி?

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த நபர்கள் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

ஜோ பைடன் அறிக்கை

இந்த நிலையில், டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து எனது குழுவினர் விளக்கினர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் அதிபரை பாதுகாத்த ரகசிய சேவை அதிகாரிகளின் பணியை நான் பாராட்டுகிறேன். டிரம்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் நிம்மதி அடைந்துள்ளேன்.

பலமுறை கூறியதுபோல், நம் நாட்டில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை.

மேலும், டிரம்ப்புக்குத் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரகசிய சேவை அதிகாரிகள் உறுதிப்படுத்த எனது குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே, ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அப்போது, அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? ஜெயம் ரவி ஆவேஷம்!

ரௌடி ஆல்வின் சரித்திரப் பதிவேடு குற்றவாளி: கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம்

வந்தாரை வாழவைக்கும் சென்னை! நாய்களுக்கும்தான்!!