டி20 உலகக்கோப்பை : இந்தியா வெல்ல டிராவிட் அதை செய்தே ஆக வேண்டும் – பிரையன் லாரா அட்வைஸ்

எத்தனை சூப்பர்ஸ்டார் வீரர்களை வைத்திருந்தாலும் உலகக்கோப்பையை வெல்வதற்கு சரியான திட்டம் வேண்டும் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளை (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்க உள்ளது. முன்னதாக 2007-ம் ஆண்டு தோனி தலைமையில் முதலும் கடைசியுமாக இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றது.

அதன் பின் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற எத்தனையோ தரமான வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2-வது கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அது மட்டுமின்றி கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

இந்நிலையில் எத்தனை சூப்பர்ஸ்டார் வீரர்களை வைத்திருந்தாலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு சரியான திட்டம் வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். எனவே லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கு சூப்பர்ஸ்டார் வீரர்களை நம்பாமல் தரமான திட்டத்தை நம்ப வேண்டும் என்று லாரா கூறியுள்ளார். அதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"வெளியே இருந்து பார்க்கும்போது முந்தைய 20 ஓவர் அல்லது 50 ஓவர் உலகக்கோப்பைகளில் இந்திய அணி கடைசி நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டத்தில் தடுமாறுகின்றனர். உங்களிடம் எவ்வளவு சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இந்த உலகக் கோப்பையை எப்படி வெல்ல போகிறீர்கள் என்பது முக்கியம்.

அதற்காக என்ன திட்டத்தை கொண்டு செல்லப் போகிறீர்கள், உங்களுடைய ஆட்டத்தை எப்படி வடிவமைக்க போகிறீர்கள் அல்லது எதிரணியை எப்படி வீழ்த்த போகிறீர்கள் என்பது முக்கியம். அது போன்ற சூழ்நிலையில் ராகுல் டிராவிட் தன்னுடைய அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு தேவையான திட்டத்தை வகுப்பார் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்