டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இவரை தேர்ந்தெடுத்திருப்பேன் – இயான் மோர்கன்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இவரை தேர்ந்தெடுத்திருப்பேன் என இயான் மோர்கன் கூறியுள்ளார்.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் ப்ண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரிங்கு சிங் மற்றும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் தாமாக இருந்தால் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்திருப்பேன் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஒருவேளை நான் அணியை தேர்வு செய்திருந்தால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்திருப்பேன். அது மட்டுமே நான் எடுக்கக்கூடிய ஒரே வித்தியாசமான முடிவாக இருந்திருக்கும். அவருடன் நான் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளேன். எனவே அவர் எப்படி சிந்தித்து வேலை செய்வார் என்பது எனக்குத் தெரியும்.

அவர் இந்திய அணிக்கு ஒரு வருங்கால கேப்டனாக இருப்பார் என்று நான் உணர்கிறேன். எனவே உலகக்கோப்பை போன்ற பெரிய தருணங்களில் விளையாடும் போது தான் சிறந்த கேப்டன்கள் உருவெடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை ஓரமாக அமர்ந்திருந்தாலும் இங்கிருந்து அவருக்கு ஒரு நேர்மறையான உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து