டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத அந்த அணி மட்டும் வரக்கூடாது – யுவராஜ் சிங்

ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி இந்த உலகக்கோப்பையிலும் அதிக ரன்கள் அடிப்பார் என்று யுவராஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. ரோகித் தர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வாகியுள்ளனர். எனவே 2007-க்கு பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பையை கைப்பற்றுவோமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

இந்த நிலையில் இத்தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் பற்றி முன்னாள் வீரர்கள் கணிப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல டிராவிஸ் ஹெட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைப்பார்கள் என்று ரிக்கி பாண்டிங் கணிப்பு வெளியிட்டிருந்தார்.

அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் வீரர் யுவராஜ் சிங் 2007 போல இம்முறையும் இந்தியா சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான் வரும் என்று அவர் கணித்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியா மட்டும் வந்து விடக்கூடாது என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

மேலும் 2024 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி இந்த தொடரிலும் அதிக ரன்கள் அடிப்பார் என்று யுவராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய விதத்தையும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற விதத்தையும் நான் உணர்கிறேன். அது நேரத்தை பொறுத்தது. எங்களிடம் பெரிய தொடர்களில் வெல்லும் தன்னம்பிக்கை இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே இந்தியா தங்களுக்கு தாங்களே ஆதரவு கொடுத்து தங்களின் பலத்திற்கு தகுந்தாற்போல் விளையாடினால் கண்டிப்பாக அவர்களால் வெற்றியை நோக்கி செல்ல முடியும்.

அதைத்தான் நானும் நம்புகிறேன். இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வரும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் அணியும் 3-வதாக வரலாம். ஆனால் ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது. இந்த தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக்கை பார்ப்பதற்காக நான் காத்திருக்கிறேன். அவர் மிகப்பெரிய காயத்திலிருந்து மீண்டும் வருகிறார். அதேபோல ஐபிஎல் தொடரில் விராட் கோலி அபாரமாக செயல்பட்டார். எனவே இந்த தொடரிலும் அவர் அதிக ரன்கள் அடிக்கக்கூடியவராக இருப்பார் என்று தெரிகிறது" என கூறினார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து