தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிரடியாக ஆடிய டி காக் 65 ரன்கள் எடுத்தார்.
செயிண்ட் லூசியா,
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் 'சூப்பர் 8 ' சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த நிலையில் ஹென்றிக்ஸ் 19 ரன்னில் அவுட் ஆனார்.
மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் அரைசதம் அடித்த நிலையில் 65 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கிளாசென் மற்றும் மில்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் கிளாசென் 8 ரன்னிலும், அடுத்து வந்த மார்க்ரம் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மில்லர் உடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் 28 பந்தில் 43 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிரடியாக ஆடிய டி காக் 65 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆட உள்ளது.