T20 World Cup: Virat-Rohit Should Not Be Openers – Hayden
சிட்னி,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கோலாகலமாக துவங்கியுள்ள டி20 உலகக்கோப்பையில் இந்தியா தங்களுடைய பயிற்சி போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அயர்லாந்தை முதல் போட்டியில் எதிர்கொள்ளும் இந்தியா வரும் 9-ம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தானை சந்திக்கிறது. முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்ற கருத்துகள் காணப்படுகின்றன.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருக்கிறார். எனவே ஆர்சிபி அணியை போலவே இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் துவக்க வீரராக களமிறங்குவது சிறந்த தேர்வாக இருக்கும் என்று கங்குலி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த இருவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். எனவே எதிரணிக்கு சவாலை கொடுக்க வேண்டுமெனில் ஜெய்ஸ்வால் – ரோகித் ஆகிய இடது வலது கை பேட்ஸ்மேன்கள்தான் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா – விராட் கோலி என ஆரம்பத்திலேயே வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் ஆடம் ஜாம்பா போன்ற ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகள் இந்தியாவை வீழ்த்தி விடும் என்று மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார். எனவே விராட் கோலியின் தற்போதைய பார்ம் பற்றி பார்க்காமல் இந்தியாவின் வெற்றியைப் பற்றி யோசிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
"நீங்கள் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் சேர்க்கையை கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 5 பேட்ஸ்மேன்களும் தொடர்ச்சியாக வலது கை வீரர்களாக வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் ஆடம் ஜம்பா போன்ற ஸ்பின்னர்களை வைத்து உங்களை வீழ்த்தி விடுவார்கள் . எனவே அற்புதமான பார்மில் இருக்கும் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாட வேண்டும். ரோகித் சர்மா பல பரிணாமங்களை கொண்ட வீரர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் நம்பர் 4-வது இடத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அதனால் இம்முறை அவர் மிடில் ஆடரில் களமிறங்கி விளையாட வாய்ப்புள்ளது" என்று கூறினார்.