டி20 உலகக்கோப்பை: தொடரிலிருந்து வெளியேறிய பின் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கூறியது என்ன..?

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது.

ஆண்டிகுவா,

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகளுடன் இடம்பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற நிலையில் வெளியேறியுள்ளது.

அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்த சமயத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்றதையடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் எவ்வளவு போராடியும் இலக்கை கடைசி ஓவரின் முதல் பந்தில் எட்டி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது மட்டுமன்றி அரையிறுதி சுற்றுக்கும் தகுதிபெற்றது.

இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது. வாழ்வா, சாவா போட்டியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் களத்தில் செய்த சில தவறுகளாலேயே தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பேசுகையில், "கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.

விக்கெட்டுகளை கொத்து கொத்தாக விட்டுக் கொடுத்தோம். அப்படி நடக்கும்போது, கீழ் வரிசை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகமாகும். அதேபோல் இந்த ஆட்டத்தில் 135 ரன்கள் எடுத்த போதும், பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள்" என்று கூறினார்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி