டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை

இலங்கை தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டும், வனிந்து ஹசரங்கா, மதீஷா பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

செயிண்ட் லூசியா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி நெதர்லாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், அசலங்கா ஆகியோர் தலா 46 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 83 ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

நெதர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் லெவிட், ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டும், வனிந்து ஹசரங்கா, மதீஷா பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா