டி20 உலகக்கோப்பை: விராட் சிறந்த வீரர்தான்..ஆனால் இந்தியா வெல்ல அவர் அதை செய்ய வேண்டும் – கங்குலி

உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவை குறைத்து மதிப்பிட முடியாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. புதிய டி20 சாம்பியனை நிர்ணயிக்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது.

இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிக ரன்கள் அடிப்பது அவசியமாகிறது. ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 765 ரன்கள் விளாசி தொடர்நாயகன் விருது வென்று உலக சாதனை படைத்த அவர் இந்த ஐ.பி.எல். தொடரிலும் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். எனவே நல்ல பார்மில் இருக்கும் அவர் இம்முறையும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து இந்தியாவின் நாயகனாக செயல்படுவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி மகத்தான வீரராக இருந்தாலும் இம்முறை இந்தியா வெற்றி பெறுவதற்கு ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக இந்த கருத்தை சொல்லி வரும் அவர் மீண்டும் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"நான் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரை தொடக்க வீரர்களாக களமிறக்குவேன். ஐபிஎல் தொடரின் 2-வது பகுதியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய வழியில் விராட் கோலி இங்கேயும் விளையாட விரும்புகிறேன். அவர் சுதந்திரமாக பேட்டிங் செய்ய வேண்டும். அவர் மகத்தான வீரர். ஆனால் இந்தியா சிறப்பாக செயல்படுவதற்கு விராட் கோலி ஐபிஎல் தொடரைப் போல ஓப்பனிங்கில் சுதந்திரமாக விளையாட வேண்டும்.

எனவே ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டாப் ஆர்டரில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும். நம்முடைய அணியில் நிறைய தரமான வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஐபிஎல் தொடரால் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இங்கே வருகின்றனர். அது நியூயார்க் நகரில் அவர்களுக்கு உதவும். அங்குள்ள பெரிய மைதானங்கள் நம்முடைய ஸ்பின்னர்களுக்கு உதவும். எனவே உலகக்கோப்பைகளில் நீங்கள் இந்தியாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் நம்முடைய அணியில் நிறைய தரம் இருக்கிறது" என்று கூறினார்.

Related posts

‘இவரிடம் எல்லாம் சரியா இருக்கு’- இந்திய இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

ஜோஷ் இங்கிலிஸ் அபார சதம்.. ஸ்காட்லாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

பயிற்சியாளராக கம்பீர் மற்றும் டிராவிட் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் – ரிஷப் பண்ட்