டி20 உலகக்கோப்பை வெற்றி பேரணி: மும்பை போலீசுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

பேரணியை வெற்றிகரமாக நடத்த துணை புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் (ஜூன்) 29ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது.

இந்த வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரை பகுதியில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்த துணை புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி மற்றும் இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deep respect and heartfelt thanks to all the officers and staff of @MumbaiPolice & @CPMumbaiPolice for doing a phenomenal job during Team India’s Victory Parade. Your dedication and service is highly appreciated. Jai Hind !

— Virat Kohli (@imVkohli) July 5, 2024

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி