டி20 உலகக்கோப்பை; ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா..? – அமெரிக்க அணியுடன் இன்று மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் இந்திய அணி இன்று அமெரிக்காவுடன் மோதுகிறது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 22 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்ட போதிலும் எந்த அணியும் சூப்பர்8 சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தனது முதல் இரு ஆட்டங்களில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது. அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்8 சுற்றுக்கு நுழையும் உத்வேகத்துடன் இந்தியா தயாராகியுள்ளது.

மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்க அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவையும், அடுத்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. 4 புள்ளியுடன் உள்ள அமெரிக்கா அடுத்த சுற்றை எட்டுவதற்கும் இன்னும் ஒரு வெற்றி தேவை. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா- அமெரிக்கா நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறையாகும். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. தரோபாவில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தான் ஆட்டத்தை பார்க்க முடியும். தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவிய கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா