டி20 கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு… நியூசிலாந்து பந்துவீச்சாளர் வரலாற்று சாதனை

ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை மெய்டனாக வீசுவதே அவ்வளவு எளிதானதல்ல.

தரோபா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதில் அதிசயம் என்னவென்றால், பெர்குசன் வீசிய 4 ஓவர்களில், அதாவது 24 பந்துகளில் பப்புவா நியூ கினியா பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதுதான். ஆம்.. தான் வீசிய 4 ஓவர்களையும் பெர்குசன் மெய்டன் ஓவராக வீசியுள்ளார். அத்துடன், 3 விக்கெட்டுகளையும் சாய்த்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

(ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை வீசினால் அது மெய்டன் ஓவராக கருதப்படும்)

கிரிக்கெட்டை பொறுத்தவரை, டெஸ்ட் போட்டிகளில் பேட்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவர் மெய்டன் ஓவராக மாறுவது இயல்பாகும். இதேபோல ஒருநாள் போட்டிகளிலும் சில நேரங்களில் மெய்டன் ஓவர்களை பார்க்க முடியும்.

ஆனால் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட விரும்புவதால், எப்போதாவது தான் மெய்டன் ஓவர்களை பார்க்க முடியும். ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரை மெய்டனாக வீசுவதே அவ்வளவு எளிதானதல்ல. இந்த சூழலில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டனாக வீசி, அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது கிரிக்கெட்டில் அரிதான நிகழ்வாகவே பார்க்க முடிகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா