டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தில் லியம் லிவிங்ஸ்டன்!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 47 பந்துகளில் 87 ரன்களும், 3 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் லியம் லிவிங்ஸ்டன். மேலும், முதலாவது டி 20 போட்டியில் 27 பந்துகளில் 37 ரன்களும் 3 ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அசத்திய போதும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.

ஏற்கனவே ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த மார்கஸ் ஸ்டோனிஸைவிட (211 புள்ளி) 42 புள்ளிகள் அதிகமாக பெற்று 253 புள்ளிகளுடன் லியம் லிவிங்ஸ்டன் முன்னிலை பெற்றுள்ளார்.

அவர்களுக்கு அடுத்தபடியாக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா (208 புள்ளிகள்) மூன்றாவது இடத்திலும் மற்றும் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (206 புள்ளிகள்) நான்காவது இடத்திலும் உள்ளனர்.

பேட்டர்கள் தரவரிசை

லியம் லிவிங்ஸ்டன் பேட்டர்கள் தரவரிசையில் 17 இடங்கள் முன்னேறி 33-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்கிலிஸ் 37(27) ரன்கள் மற்றும் 42(26) ரன்கள் விளாசியதன் மூலம் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.

பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அதிரடியாக விளையாடி 31(14) மற்றும் 59(23) ரன்கள் விளாசியதன் மூலம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

மற்றொரு ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ஷார்ட் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்ததன் மூலம் 44 இடங்கள் முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா ஒரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!