டெஸ்ட் கிரிக்கெட்: ஜாக் காலிசின் மாபெரும் சாதனையை சமன் செய்த பென் ஸ்டோக்ஸ்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

பர்மிங்காம்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக பிராத்வெய்ட் 62 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 376 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜெமி சுமித் 95 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 94 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மார்க் வுட்டின் வேகப்பந்து வீச்சில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. 2-வது இன்னிங்சில் வெறும் 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மைக்கிள் லூயிஸ் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற 82 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ் – பென் டக்கெட் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பென் ஸ்டோக்ஸ் வெறும் 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. பென் 57 ரன்களுடனும், பென் டக்கெட் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாக் காலிசின் மாபெரும் சாதனையை படைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ஜாக் காலிசை சமன் செய்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. மிஸ்பா உல் ஹக் – 21 பந்துகள்

2. வார்னர் – 23 பந்துகள்

3. பென் ஸ்டோக்ஸ்/ ஜாக் காலிஸ் – 24 பந்துகள்

4. ஷேன் ஷில்லிங்போர்டு – 25 பந்துகள்

Ben Stokes wasted no time helping England to 12 #WTC25 points and a #ENGvWI series clean sweep More https://t.co/mki3YBNkVkpic.twitter.com/2sD9h3juBa

— ICC (@ICC) July 29, 2024

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி