மும்பை,
மும்பை கிரான்ட் ரோடு பகுதியை சேர்ந்த பெண் கிரித்தி வியாஸ் (வயது28). இவர் அந்தேரி பகுதியில் உள்ள பிரபல சலூனில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் 2018-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிரித்தி வியாசை அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் சித்தேஷ் தமங்கர், குஷி சாஜ்வானி கொலை செய்து உடலை கழிமுக கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கிரித்தி வியாஸ் பணிபுரியும் சலூனில் அவருக்கு கீழ் சித்தேஷ் தமங்கரும், குஷி சாஜ்வானியும் வேலை பார்த்து வந்து உள்ளனர். இதில் சித்தேஷ் தமங்கர் சரியாக வேலை பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கிரித்தி வியாஸ் அவருக்கு மெமோ அனுப்பி உள்ளார்.
இதன் காரணமாக தனது வேலை பறிபோய்விடும் என சித்தேஷ் தமங்கர் நினைத்தார். மேலும் வேலை போனால் அவருக்கும், குஷி சாஜ்வானிக்கு இடையேயான தகாத உறவும் வெளியில் அம்பலமாகிவிடும் என பயந்தார். எனவே சித்தேஷ் தமங்கரும், குஷி சாஜ்வானியும் கிரித்தி வியாசை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அவர்கள் கிரான்ட் ரோடு ரெயில் நிலையம் அருகில் கிரித்தி வியாசை சந்தித்து தங்கள் காரில் ஏற்றி உள்ளனர். குஷி சாஜ்வானி காரை ஓட்டிச்செல்ல, ஓடும் காரிலேயே சித்தேஷ் தமங்கர் கிரித்தி வியாசை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவர்கள் கிரித்தி வியாசின் உடலை மாகுல் கழிமுகப்பகுதியில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் கிரித்தி வியாசின் உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காரில் இருந்து கைப்பற்றப்பட்ட கிரித்தி வியாசின் ரத்த மாதிரி, தலை முடி, அவரது குடும்பத்தினர் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போனது.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு தொழில்நுட்ப ஆதாரங்கள், டி.என்.ஏ. சோதனை முடிவுகள், செல்போன் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள், தடயங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் கிரித்தி வியாஸ் கொலை வழக்கில் சித்தேஷ் தமங்கர், குஷி சாஜ்வானி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் நேற்று நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே பரபரப்பு தீர்ப்பு கூறினார். பெண் மேலாளர் கிரித்தி வியாசை கொலை செய்த வழக்கில் ஊழியர்கள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.