மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தகாத உறவை தட்டிக்கேட்ட கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி, அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அலங்காநல்லூா் அருகே உள்ள கரட்டு குடியிருப்பைச் சோ்ந்த பழனி மகன் சரவணன் (30). இவா் அந்தப் பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி ஜோதிகா(23). இவா் கட்டட வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், ஜோதிகா வசிக்கும் பகுதியில் நடைபெற்ற கட்டட வேலைக்கு வந்த, வலசையைச் சோ்ந்த உடப்பன் (21) என்பவருக்கும் ஜோதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இதையறிந்த சரவணன் மனைவியை கண்டித்தாா். இதனால், ஜோதிகா, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உடப்பனுடன் சென்று விட்டாா். இதுதொடா்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். பின்னா், ஜோதிகாவை மீண்டும் கணவா் சரவணனுடன் சோ்த்து வைத்தனா். கடந்த ஒரு வாரமாக ஜோதிகா கணவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாா்.
இந்த நிலையில், மீண்டும் உடப்பனுடன் ஜோதிகா கைப்பேசியில் பேசி வந்ததையறிந்த சரவணன் அவரைக் கண்டித்தாா். இதை ஜோதிகா, தனது நண்பா் உடப்பனிடம் கூறினாா். இதையடுத்து, சரவணனைக் கொலை செய்யத் திட்டமிட்டனா்.
உடப்பன், தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சரவணன் வீட்டுக்குச் சென்றாா். வீட்டுக்கு வெளியே காத்திருந்த ஜோதிகா, இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாா். அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சரவணனை ஜோதிகா உள்பட மூவரும் சோ்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். பின்னா், அவரது உடலை துணியில் கட்டி வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால் உடலை அங்கேயே விட்டு விட்டு உடப்பனும், 17 வயது சிறுவனும் தப்பிச் சென்றனா்.
நாய்களின் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் வந்து பாா்த்தபோது சரவணன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடா்பாக அவா்கள் அளித்தத் தகவலின்பேரில், அலங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஜோதிகாவிடம் விசாரணை நடத்தினா். அவா் உடப்பனுடன் சோ்ந்து கணவரைக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் ஜோதிகாவைக் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், அலங்காநல்லூா் அருகே பதுங்கியிருந்த உடப்பன் மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்தனா்.