தங்கச் சங்கிலியுடன் விநாயகர் சிலையைக் கரைத்த தம்பதி!

பெங்களூருவில் தங்கச் சங்கிலியுடன் சேர்த்து விநாயகர் சிலையைக் கரைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிலையை கரைக்க நீரில் விட்ட பிறகு அதில் ரூ.4 லட்சம் மதிப்புடைய தங்கச் சங்கிலி இருந்ததை தம்பதிக்கு நினைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து 10 மணிநேர தேடுதலுக்குப் பிறகு தங்கச் சங்கிலி கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விஜயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா – உமாதேவி தம்பதி. இவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்து வழிபட்டுள்ளனர். அதனோடு தங்கச் சங்கிலியையும் விநாயகர் சிலைக்கு அணிவித்துள்ளனர்.

பெங்களூருவில் சேறு நிறைந்த தாழ்வான பகுதியில், செயற்கையாக குளம் உருவாக்கி அதில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தம்பதியும் விநாயகர் சிலையை வீட்டிலிருந்து கொண்டுவந்து கரைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்குச் சென்றதும் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புடைய தங்கச் சங்கிலியை எடுக்காதது தெரியவந்தது. உடனே சிலை கரைக்கும் இடத்திற்கு வந்த அவர்கள், தங்கச் சங்கிலியுடன் சிலையை கரைக்கக் கொடுத்தது குறித்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை மற்றும் அத்தொகுதி எம்.எல்.ஏ. பிரியா கிருஷ்ணாவுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தங்கச் சங்கிலியைத் தேடிக்கொடுக்கும்படி எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

இதனையடுத்து செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் தேடுதல் பணிகளில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். விநாயகர் சிலையுடன் சங்கிலி இருந்ததை, சிலையைக் கரைக்க எடுத்துச் சென்ற இளைஞர் கண்டுள்ளார். எனினும், அது போலியானது என எண்ணி அதனை விட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், 10 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தங்கச் சங்கிலியை கண்டெடுத்துள்ளார். இதற்காக 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரையும் செயற்கைக் குளத்திலிருந்து அவர்கள் வெளியேற்றியுள்ளனர்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்