‘தங்கலானோடு ஒப்பிட்டால் அதெல்லாம் 8 சதவீதம் கூட கிடையாது’ – நடிகர் விக்ரம்

'தங்கலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சென்னை,

நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விக்ரம் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில்,

'அந்நியன், பிதா மகன், சேது, ஐ, ராவணன் போன்ற அனைத்து படங்களையுமே எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணினேன் என்று அனைவருக்குமே தெரியும். தங்கலான் படத்தோடு ஒப்பிட்டால் அதெல்லாம் 8 சதவீதம் கூட கிடையாது. நிறைய பேர் ஏன் எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார் என்று கேட்டார்கள்.

அப்போது அவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. பின்னர் யோசித்து பார்த்தபோது, தங்கலான் எனக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன். நான் எப்படி நடிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி சிறு வயதில் இருந்து முயற்சி செய்தேனோ, அப்படிதான் தங்கலான் தன் இலக்கை நோக்கி செல்கிறான்.

கல்லூரி படித்தபோது ஒரு விபத்தில் என் கால் உடைந்தது. 3 வருடங்களாக நடக்கவே இல்லை. பின்னர் 1 வருடம் ஊன்றுகோலை வைத்து நடந்தேன். அபோதும் நான் நடிக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டே இருப்பேன். பின்னர் சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் படம் எதுவும் ஓடவில்லை. நடிப்பை விட்டுவிட கூறினார்கள்.

அன்றைக்கு சினிமாவை விட்டிருந்தால், இன்றைக்கு இந்த மேடையில் நின்றிருக்க மாட்டேன். ஒரு இலக்கை நோக்கி நமது எண்ணம் இருந்தால் நிச்சயம் நம்மால் அதை அடைய முடியும். நான் எனக்குள்ளே ஒரு விஷயத்தை கேட்பேன், ஒருவேளை நமக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்திருப்போம் என, ' அப்போதும் முயற்சி செய்திருப்பேன்', என்றார்

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி