தங்கலான் பட விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தங்கலான் மற்றும் கங்குவா படத்தை வெளியிடும் முன் தயாரிப்பாளர் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல வி.ஐ.பி.க்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார். இவரது சொத்துக்களை சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013-ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க கோரி சொத்தாட்சியர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு, 2013-ம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என்று சேர்த்து சுமார் 26 கோடியே 34 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், 'தங்கலான்' படத்தை வெளியிடும் முன், அதாவது வருகிற 14-ந் தேதிக்குள் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல, அடுத்த படமான 'கங்குவா' படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணம் டெபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Citroen Launches Aircross Xplorer Limited Edition in India at Rs 8.49 Lakh